சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீஸ் நடவடிக்கை
சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் 1,285 பேர் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
சம அளவு பணிக்கு சம அளவு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இடைநிலை ஆசிரியர்கள் நான்காவது நாளாக தொடர்ந்து காமராஜர் சாலையில் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்தச் சூழலில், கைது செய்யப்பட்டவர்களில் 1,285 பேருக்கு எதிராக அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசின் உத்தரவுகளை மீறுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.