கடலோர மாவட்டங்களில் இறால் பண்ணை ஒழுங்குமுறை வாக்குறுதி என்ன ஆயிற்று?
கடலோரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இறால் பண்ணைத் தொழிலை முறைப்படுத்துவதாக தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி தற்போது எந்த நிலையில் உள்ளது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வாக்குறுதியை அரசு புறக்கணித்ததன் விளைவாக, கடலோர மாவட்டங்களில் அனுமதியற்ற இறால் பண்ணைகள் எண்ணிக்கையில்லாமல் உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் நிலத்தடி நீருடன் கலந்ததால், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக கடலோர மக்களுக்கு வயிற்று கோளாறுகள், தோல் சம்பந்தமான நோய்கள், சிறுநீரக பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் குறைகள் உருவாகி, அந்தப் பகுதி மக்களின் எதிர்கால வாழ்வே ஆபத்தில் சிக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் விவசாயத் தொழிலும் முற்றிலும் வீழ்ச்சியடைந்து வருவதாகக் கூறிய அவர், கடலோர மாவட்ட மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தருவதாக அளித்த வாக்குறுதியையே அரசு நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
அந்த நிலையில், மக்களின் வாழ்விடங்களை மாசுபாடின்றி பாதுகாக்க வேண்டிய இந்த வாக்குறுதியையும் செயல்படுத்த அரசுக்கு விருப்பமில்லை என்பதே அறிவாலய அரசின் அலட்சியத்தையும் அக்கறையின்மையையும் வெளிப்படுத்துகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த மறதிக்கும் நிர்வாகத் தோல்விக்கும் கடலோர மாவட்ட மக்கள் வரும் தேர்தலில் உரிய பதிலை அளிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.