நித்திரவிளை: கல்லால் தாக்கி ஹிட்டாச்சி ஆபரேட்டர் கொலை
நித்திரவிளை அருகே கல்லால் அடிக்கப்பட்டு படுகாயமடைந்த ஹிட்டாச்சி ஆபரேட்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரியகோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 39) என்பவர், தனியார் நிறுவனத்தில் ஹிட்டாச்சி இயந்திர ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த 18ஆம் தேதி, முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், ஐந்து பேர் கொண்ட கும்பல், சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அந்த தாக்குதலில், சதீஷ்குமாரின் தலையில் பெரிய கல்லால் அடிக்கப்பட்டதால் அவர் கடுமையாக காயமடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார், நேற்று (21ஆம் தேதி) பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், கொல்லங்கோடு போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சாச்சன், சுனில், பிஜு கோபகுமார், அனில்குமார் உள்ளிட்ட ஐந்து பேரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக சிறப்பு குழுவை அமைத்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.