நாளை காசி தமிழ் சங்கமம் நிறைவு பெறுகிறது
தமிழகம் மற்றும் வாரணாசி நகரங்களுக்கிடையிலான ஆன்மீக, கலாச்சார மற்றும் பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா, ராமேஸ்வரத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ள உள்ளார்.
கடந்த மாதம் 2ஆம் தேதி தொடங்கிய காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து நடத்தியது. பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் நடைபெற்ற இந்த சங்கமத்தின் இறுதிக்கட்ட நிகழ்ச்சி, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறவுள்ளது.
நிறைவு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய கல்வி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்வை முன்னிட்டு ராமேஸ்வரம் நகரம் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், விழா நடைபெறும் இடத்தில் மேடை மற்றும் அரங்க அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.