மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுவட்டாரத்தில் தேங்கும் கழிவுநீர் – தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தவிப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோயில் அருகே அமைந்துள்ள நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், கிழக்கு கோபுரம் செல்லும் பாதை, அம்மன் சன்னதி அருகிலுள்ள வழித்தடங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் பக்தர்கள் முகம் சுளித்தபடியே அந்தப் பகுதிகளை கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பிரதிநிதித்துவம் வகிக்கும் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்குள் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் அருகே இவ்வாறு கழிவுநீர் தேங்கி இருப்பது, பக்தர்களிடையே பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலை தொடராமல், கழிவுநீர் தேங்குவதை முழுமையாகத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.