குமாரபாளையம் அருகே நில விவகாரம்: இருதரப்பினரும் மோதல் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகிலுள்ள பகுதியில் நிலம் தொடர்பான பிரச்சினை காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயக்கவுண்டம்பாளையம் மகாலட்சுமி நகரில் வசிக்கும் சுமதி என்பவருக்கும், அண்டை நில உரிமையாளர்களான முத்துசாமி, ராஜம்மாள் மற்றும் மோகன்ராஜ் ஆகியோருக்கும் இடையே நீண்ட காலமாக நில உரிமை தொடர்பான முரண்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மோகன்ராஜ் அரிவாளுடன் சுமதி வீட்டின் அருகே இருந்த மரங்களை வெட்டியதாக தெரிகிறது. இதை பார்த்து சுமதி கேள்வி எழுப்பியதால், ஆத்திரமடைந்த முத்துசாமி, மோகன்ராஜ் மற்றும் ராஜம்மாள் ஆகியோர் நில விவகாரத்தை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாய்த்தகராறு தீவிரமடைந்து கைகலப்பாக மாறியதில், சுமதி, சுகன்யா மற்றும் குணசேகரன் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகி கடுமையாக காயமடைந்தனர்.
பின்னர், காயமடைந்த மூவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.