சபரிமலையில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று இருமுடி கட்டி, 18 படிகள் ஏறி பக்தியுடன் தரிசனம் செய்தார். அவருக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.
சபரிமலைக்கு தரிசனத்திற்காக வந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமை திரவுபதி முர்முவுக்கு சேர்கிறது.
தரிசனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை டெல்லியில் இருந்து தனியார் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர், விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.
இன்று காலை 9.35 மணிக்கு திரவுபதி முர்மு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை நோக்கிப் புறப்பட்டார். நிலக்கல்லில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்ற அவர், கணபதி கோயிலில் இருமுடி கட்டி, ஜீப் மூலம் சந்நிதானத்தை அடைந்தார்.
அங்கு தேவசம் போர்டு அதிகாரிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று, மூத்த சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். பின்னர் சந்தனப் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாளிகைப் புரத்தம்மன் கோயிலிலும் குடியரசுத் தலைவர் வழிபாடு செய்தார்.
தரிசனம் முடிந்ததும், திரவுபதி முர்மு பம்பை திரும்பி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார்.
அவரது வருகையை முன்னிட்டு, சபரிமலையில் பக்தர்களுக்கு தற்காலிக நுழைவு தடை விதிக்கப்பட்டது. தரிசனம் முடிந்தபின் மட்டுமே பொதுப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மாதாந்திர வழிபாடு நிறைவடைந்ததால், இன்று இரவு நடை சாத்தப்பட்டு, அடுத்த மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.