கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் தீவிர விசாரணை
கரூர்: கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்து வரும் நிலையில், தவெக (தமிழக வெற்றி கழகம்) நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் நேரில் ஆஜரானனர்.
விசாரணையின் போது, கரூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி கடிதங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசல் ஏற்பட்ட சூழ்நிலைகள், வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கூட்டம் நடைபெற்ற நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் மற்றும் நிர்வாகிகளின் பங்கு குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தொடர்ந்து மேலும் சிலர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.