ஆஸ்திரேலியா தொடர் — ரோஹித், கோலியின் எதிர்காலம் குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்று வருகின்றனர். பெர்த் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா 8 ரன்களுக்கும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியதும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
இருவரும் 2027 உலகக் கோப்பை வரை விளையாடும் எண்ணத்தில் இருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் அவர்களின் செயல்திறனை நிரூபிக்கும் முக்கியமான வாய்ப்பாக கருதப்படுகிறது.
இந்நிலையில், ஐசிசி பகுப்பாய்வு நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கூறியதாவது:
“விளையாட்டில் ‘நான் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன்’ என்ற மனப்பாங்கு எனக்குப் பிடிக்காது. 2027 உலகக் கோப்பையை நோக்கி மட்டும் அல்லாமல், குறுகிய கால இலக்குகளையும் வீரர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
விராட் கோலி எப்போதும் உற்சாகத்துடன் விளையாடுபவர். அவர் தற்போதைய ஆஸ்திரேலிய தொடரை சிறிய இலக்குகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டு இருப்பார் என நம்புகிறேன்.
ரோஹித் மற்றும் கோலி இருவரும் இந்திய அணியின் முக்கிய தூண்கள். ஆனால், அடுத்த உலகக் கோப்பை வரை தங்கள் உச்சநிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பதைக் காட்டப்போகும் தொடர் இதுவே,” என பாண்டிங் குறிப்பிட்டார்.