“தீபாவளியில் ரூ.890 கோடி மதுபான விற்பனை — அதுவே திமுக அரசின் சாதனை!” – நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்:
“தீபாவளி நாளில் மட்டும் ரூ.890 கோடி மதுபானம் விற்பனை செய்யப்பட்டிருப்பது திமுக அரசின் மிகப்பெரிய ‘சாதனை’ என்று சொல்லலாம்,” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
கோவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறினார்:
“குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை வருகை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று பெருமை கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அந்த பகுதிக்குத் தேவையான அக்கறையைக் காட்டவில்லை.
அரசு, மழைநீர் வடிகால் பணிகள் 95% முடிந்துவிட்டதாகக் கூறுகிறது. ரூ.5,000 கோடி செலவிட்டதாகச் சொல்கிறது. ஆனால் அந்தத் தொகை எங்கு செலவாகியது என்பது தெளிவில்லை. சத்துணவு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பிரச்சினைகள் நீடிக்கின்றன. மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் தவறுகள் ஏற்பட்டுள்ளன.
சட்டப்பேரவையில் நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் தரும் பதில்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. தொழில்துறை முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெள்ளை காகிதத்தை காட்டுகிறார் — இதுவே அவர்களின் ஆட்சித் திறமை! எந்தக் கட்சியாக இருந்தாலும் தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை,” என்றார்.
மேலும்,
“திருநெல்வேலியில் நான் அரசியல் களத்தில் இறங்குவதால் பயப்படுவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியிருப்பது எந்த அடிப்படையில் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் அமைதியான பகுதி கொங்கு மண்டலம். ஆனால் தீபாவளி தினத்தன்று மட்டும் ரூ.890 கோடி மதுபான விற்பனை நடந்தது. இதுவே திமுக அரசின் சாதனை எனலாம். விரைவில் இந்த நிலைமை மாறும்,” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.