திமுக நிர்வாகிக்கு சொந்தமான சாயப்பட்டறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் காவிரியாறு மாசு – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில், திமுக நிர்வாகி ஒருவருக்குச் சொந்தமான சாயப்பட்டறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக காவிரியாற்றில் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் ஆற்றுநீர் மாசடைந்து வருவதோடு, பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
பள்ளிப்பாளையம் அடுத்த ஒட்டமெத்தை பகுதியில் இயங்கி வரும் இந்தச் சாயப்பட்டறையிலிருந்து, நாள்தோறும் விதிமுறைகளை மீறி சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எந்தவித சுத்திகரிப்பும் இன்றி வெளியேற்றப்படும் இந்தக் கழிவுநீர், அருகில் ஓடும் காவிரியாற்றில் நேரடியாக கலப்பதால், நீரின் நிறம், நாற்றம் மற்றும் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காவிரியாறு இந்தப் பகுதியில் குடிநீர் தேவைகள், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கான நீராதாரமாக இருந்து வரும் நிலையில், சாயக்கழிவுகள் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, மீன்கள் செத்துமடிவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஆற்றுநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தோல் நோய்கள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசியல் செல்வாக்கு காரணமாக அதிகாரிகள் மௌனம் காத்து வருவதாகவும், சட்ட விதிகளை மீறியும் சாயப்பட்டறை செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, மாவட்ட ஆட்சியர் நேரடியாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, சாயப்பட்டறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவிரியாற்றை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரியாறு போன்ற முக்கியமான நதியை பாதுகாக்க அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.