தைவானை சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சி – சீனாவின் நடவடிக்கையால் கிழக்கு ஆசியாவில் பதற்றம்
தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்த சீன ராணுவம் தனது விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகளை அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
கிழக்காசியாவில் அமைந்துள்ள தைவானை சீனா தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதி வருகிறது. தைவான் தனி நாடு அல்ல என்றும், அது சீனாவின் ஒரு மாகாணம் மட்டுமே என்றும் சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்தக் கருத்தைத் திட்டவட்டமாக மறுக்கும் தைவான், தங்களுக்கு தனி அரசியல் அமைப்பு, அரசாங்கம் மற்றும் இறையாண்மை உள்ளதால் தாங்கள் தனி நாடு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இந்த மாறுபட்ட நிலைப்பாடுகள் காரணமாக, பல ஆண்டுகளாக சீனா மற்றும் தைவான் இடையே அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான மோதல் நிலவி வருகிறது. தைவான் விவகாரத்தில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்படுவதையும் சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்நிலையில், வெளிநாட்டு நாடுகளின் தலையீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தைவானை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்பரப்புகளில் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்த சீனா முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் ஒருங்கிணைந்து பயிற்சியில் ஈடுபடுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த ராணுவ நடவடிக்கை தைவானை அச்சுறுத்தும் வகையிலும், பிராந்திய சக்திகளுக்கு எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் கிழக்கு ஆசியப் பகுதியில் பாதுகாப்பு நிலைமை குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ள நிலையில், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.