திருத்தணி ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞர் மீது அரிவாள் தாக்குதல் – சிறுவர்கள் கைது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சிறுவர்கள் குழு அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மும்பையைச் சேர்ந்த அந்த இளைஞர், திருத்தணி நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் நான்கு சிறுவர்கள், அந்த இளைஞரைச் சுற்றி வந்து, அரிவாளுடன் மிரட்டுவது போல ரீல்ஸ் வீடியோ எடுத்து விளையாட்டாக நடிப்பது போல் காட்டியுள்ளனர்.
ஆனால், சிறிது நேரத்தில் அந்தச் சம்பவம் கொடூர தாக்குதலாக மாறி, அந்த இளைஞரை சிறுவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டித் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இளைஞர், உடனடியாக மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து திருத்தணி ரயில்வே காவல்துறையினர் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நான்கு பேர் கொண்ட சிறுவர்கள் கும்பல் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் ரயில் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், அரிவாள் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
சிறுவர்கள் என்பதால், அவர்கள் மீது சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே காவல்துறை கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.