மாசடைந்த குடிநீர் காரணமாக இருவர் உயிரிழப்பு – கர்லம்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் போராட்டம்
திருத்தணியை அடுத்துள்ள கர்லம்பாக்கம் குடியிருப்பு பகுதியில், மாசுபட்ட குடிநீரை குடித்ததால் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்லம்பாக்கம் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, உள்ளாட்சி அமைப்பின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த நீரைப் பயன்படுத்திய பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை மற்றும் சுதா ஆகியோர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் உடல்நல பாதிப்புகளுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கழிவுநீர் கலந்த குடிநீரே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என குற்றம் சாட்டிய பொதுமக்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.