சென்னை சிஎம்டிஏ நிர்வாகம் மீது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் புகார்
முடிச்சூரில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுத்தத்தில், ஓட்டுநர்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஓய்விடம், சிஎம்டிஏ நிர்வாகத்தால் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் செயல்பட்டு வருகிறது.
திட்டமிட்ட முறையில் வசதிகள் உருவாக்கப்படாததால், அங்கு பணியாற்றும் பேருந்து ஓட்டுநர்கள் அடிப்படை வசதிகள் இன்றியே நீண்ட காலமாக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஓட்டுநர்களின் ஓய்வுக்காக அமைக்கப்பட்ட அறை, 100-க்கும் அதிகமான பட்டாலியன் காவல் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஓய்வு எடுக்க உரிய இடமின்றி, ஓட்டுநர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, ஓட்டுநர்களுக்கான வசதிகளை மீட்டளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.