இசை நிகழ்ச்சியில் வன்முறை தாக்குதல்: ரசிகர்கள் மீது கற்கள் வீச்சு
வங்கதேசத்தின் பிரபல ராக் இசைக் கலைஞர் ஜேம்ஸ் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சி, தீவிரவாத தாக்குதலால் குழப்பமாக முடிந்தது. இந்தச் சம்பவத்தில் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, நிகழ்ச்சி முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
ஜேம்ஸ் என்ற பெயரில் உலகம் முழுவதும் அறியப்படும் ஃபாரூக் மஹ்பூஸ் அனாம், வங்கதேச ராக் இசையின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார். அவரது பாடல்கள் நாட்டின் இசை மரபை மீட்டெடுத்ததோடு, இளைய தலைமுறையிடம் தேசிய உணர்வையும் வளர்த்ததாகக் கருதப்படுகின்றன. 1970-களின் இறுதியில் இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர், நாட்டுப்புற இசையின் ஆழத்தையும் ஹார்ட் ராக் இசையின் வேகத்தையும் ஒன்றிணைத்து தனித்துவமான பாணியை உருவாக்கினார்.
“ஸ்டேஷன் ரோடு”, “ஜெயில் தேகே போல்ச்சி” உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. முன்னதாக “ஃபீலிங்ஸ்” என அழைக்கப்பட்ட, பின்னர் நகர் பவுல் என்ற பெயரில் அறியப்பட்ட இசைக் குழுவின் முன்னணி பாடகராக இருந்த ஜேம்ஸ், தெற்காசிய இசை உலகில் முக்கிய இடம் பிடித்துள்ளார். இந்திய திரைப்படப் பாடல்கள் மூலம் எல்லைகளைத் தாண்டிய புகழையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், வங்கதேசத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஃபரித்பூர் ஜிலா பள்ளியின் 185வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் இறுதிக்கட்ட நிகழ்ச்சியாக ஜேம்ஸின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜேம்ஸ் மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன், திடீரென உள்ளே புகுந்த தீவிரவாதக் குழு, மேடையை நோக்கி கற்கள் மற்றும் செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த வன்முறையில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக ஜேம்ஸ் உயிர் தப்பினார். அவரது இசைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிற கலைஞர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்பே முடிக்கப்பட்ட நிலையில், இந்த திடீர் தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக, விழாவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரஜிபுல் ஹசன் கான் தெரிவித்தார்.
ஃபரித்பூர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஷமீம் அறிவித்தார். சம்பவத்துக்குப் பிறகு அந்தப் பகுதி முழுவதும் காவல் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி முடிவடைந்த பின்னர், வங்கதேசத்தில் இசை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் நியமனம் குறித்த திட்டங்கள், அடிப்படைவாத அமைப்புகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, இசை விழாக்கள் தடுக்கப்படுவதும், கலைஞர்கள் தாக்கப்படுவதும், கலாச்சார அமைப்புகள் சேதப்படுத்தப்படுவதும் அதிகரித்து வருவதாகக் கலை உலகினர் கவலை தெரிவிக்கின்றனர். நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க அரசுக்கு பொறுப்பு இருப்பதாகவும், தற்போதைய இடைக்கால அரசு இசை மற்றும் கலைத் துறையை காக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இசைக் கலைஞர்கள் வலியுறுத்துகின்றனர்.