பிள்ளையார்பட்டி கோயில் நிதி முறைகேடு : விசாரணைக்கு ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற உத்தரவு
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளையின் வரவு-செலவு கணக்குகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ள, ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான தங்க நகைகள் மற்றும் பணத்தில் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அறங்காவலர்கள் தரப்பில் முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, கோயிலுக்குரிய சொத்துகள் மற்றும் நிதி பராமரிப்பில் சந்தேகம் எழுந்துள்ளதால், விரிவான விசாரணை அவசியம் என கருத்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் தலைமையில் தனிப்பட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என அறிவித்த நீதிபதி, அறங்காவலர்களிடம் அவர் நேரடியாக விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.
மேலும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து இடைக்கால அறிக்கையை ஜனவரி 30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.