சென்னை–கொச்சி விமான கட்டணம் மும்மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி
சென்னையிலிருந்து கொச்சி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் திடீரென மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜனவரி 20ஆம் தேதி வரை கேரளாவிற்கு செல்லும் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக விமான டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், சென்னையிலிருந்து கொச்சி செல்லும் விமானங்களின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.3,681 ஆக இருந்த டிக்கெட் விலை தற்போது ரூ.11,500 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், நேரடி விமானம் கிடைக்காத நிலையில், பெங்களூரு வழியாக கொச்சி செல்லும் இணைப்பு விமானங்களுக்கு ரூ.17,000-க்கும் மேற்பட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தினமும் நான்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் விமான சேவைகளை வழங்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் விமான நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.