திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவுடன் செல்ல முயன்ற தம்பதி – போலீஸ் தலையீட்டால் பரபரப்பு
மதுரை திருப்பரங்குன்றம் மலைப்பகுதிக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதியரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற கந்தூரி விழாவின் போது, ஆடு மற்றும் கோழி பலியிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஆடு, கோழி உள்ளிட்ட உயிரினங்களை பலியிட தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது.
கடந்த 3ஆம் தேதி முதல், மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்கா மற்றும் காசி விசுவநாதர் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. பின்னர், கடந்த 22ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, இரு மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகு மட்டுமே காசி விசுவநாதர் கோயிலும், சிக்கந்தர் தர்காவும் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி ஒருவர் அசைவ உணவுடன் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல முயன்ற போது, அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களை அருகிலுள்ள ஒரு வீட்டில் வைத்துவிட்டு, பின்னர் தர்காவிற்கு சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.