திமுக வாக்குப் பலம் 30 சதவிகிதமாகக் குறைந்துள்ளது
சட்டமன்றத் தேர்தல் காலம் அருகில் வந்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வாக்கு ஆதரவு 36 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த தேர்தலில் 41 சதவிகிதமாக இருந்த திமுகவின் வாக்குப் பங்கு தற்போது 30 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறினார்.
மேலும், திமுகவின் அரசியல் செல்வாக்கு கணிசமாக சரிந்துள்ள நிலையில், NDA கூட்டணியின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து 36 சதவிகிதத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் கடைகளை கட்டுப்படுத்துவோம் என்று அறிவித்த திமுக அரசு, அதற்கு மாறாக மது விற்பனையை அதிகரித்துள்ளதாகவும், தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கலாம் என்பதிலேயே அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் காலத்தில் அளித்த எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், பொதுமக்களை ஏமாற்றும் ஆட்சி நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக அமைச்சர்களில் 17 பேருக்கு எதிராக ஊழல் புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும் கூறினார்.
திமுக ஆட்சிக் காலத்தில் 42 காவல் நிலையக் காவல் மரணங்களும், 700-க்கும் அதிகமான கொலைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாகவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 15 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக விரிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.