தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பிப்ரவரி 15ல் சென்னையில் உண்ணாவிரதம்
தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் காளிதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நல்வாழ்வுத்துறை கடந்த 2024 நவம்பர் 28ஆம் தேதி வெளியிட்ட அரசாணையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட அந்த அரசாணை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக அமையும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை மூட முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரத்த பரிசோதனை மையங்களின் கட்டிட இடவசதி தொடர்பாக மத்திய அரசு எந்தவிதமான வழிகாட்டுதல்களையும் வழங்காத நிலையில், தமிழக அரசு தனிப்பட்ட முறையில் அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
மேலும், ரத்த பரிசோதனை மையங்களுக்கு குறைந்தபட்சமாக நகரப் பகுதிகளில் 150 சதுர அடியும், கிராமப்புறங்களில் 100 சதுர அடியும் இடவசதியாக நிர்ணயிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களின் இடமாற்ற கலந்தாய்வுகளை வெளிப்படையான முறையில் நடத்த வேண்டும் என்பதையும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என காளிதாசன் தெரிவித்தார்.