சாத்தூர் அருகே உடைந்த வைப்பாறு தரைப்பாலம் – சரி செய்யக் கோரி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்
சாத்தூர் அருகே வைப்பாற்றில் அமைந்துள்ள தரைப்பாலம் பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில், அதை உடனடியாகப் பழுது பார்க்கக் கோரி அச்சங்குளம் கிராம மக்கள் இன்று ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர் அருகே உள்ள இரவார்பட்டி – அச்சங்குளம் கிராமங்களை இணைக்கும் வகையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் பாலம் திறக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தண்ணீரின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து இதுவரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 126 குடும்ப அட்டைதாரர்கள், இந்த தரைப்பாலம் வழியாக இரவார்பட்டியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வாங்குகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெம்பக்கோட்டை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் போதெல்லாம் பாலம் வழியாகச் செல்வது கடினமாகி, கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தண்ணீர் ஓட்டம் குறைந்திருக்கும் சமயங்களில் மக்கள் ஆபத்தான முறையில் நடந்து ஆற்றைக் கடக்கின்றனர். தண்ணீர் பெருக்கெடுக்கும் காலங்களில், அச்சங்குளம் கிராமத்தினர் சாத்தூர் அல்லது வெம்பக்கோட்டை வழியாக 25 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் சென்று, இரண்டு பேருந்துகள் மாறிசென்று தான் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகிறது.
சமீபத்திய தொடர்ச்சியான மழையால் வைப்பாற்றில் மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்துள்ள நிலையில், கிராம மக்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் பாலம் பழுதுபார்க்க மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கடும் அதிருப்தியடைந்த அச்சங்குளம் பகுதி மக்கள், இன்று உடைந்த தரைப்பாலத்தின் மேல் அமர்ந்து, சிலர் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். உடனடியாக தரைப்பாலம் சீரமைக்கப்பட வேண்டும் என கோரினர்.