வழுக்கைக்கு முற்றுப்புள்ளி? – தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் புதிய மருந்து வெற்றிப் பயணம்
ஆண்களில் ஏற்படும் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட புதிய மருந்து, மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையிலும் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ளது. இதன் விளைவாக, அந்த மருந்தை தயாரித்துள்ள நிறுவனத்தின் சந்தை மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தித் தொகுப்பு இதோ.
ஆண்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களில், அதிகமான மனஅழுத்தத்தை ஏற்படுத்துவது தலைமுடி உதிர்வு பிரச்னையே ஆகும். இளம் வயதிலேயே முடி கொட்டத் தொடங்குவதால், தோற்றத்தில் முதுமை தோன்றுகிறது. இதனால் திருமண வாழ்க்கையிலும் தடைகள் ஏற்படுகின்றன. சிலருக்கு இது மனச்சோர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மைக்கும் காரணமாக மாறுகிறது. ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும் தலைமுடி உதிர்வால் பல்வேறு சமூக மற்றும் உளவியல் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண உலகின் பல பகுதிகளில் பல நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால், இதுவரை எந்த நிறுவனமும் குறிப்பிடத்தக்க அளவில் முழுமையான வெற்றியைப் பெறவில்லை. இந்தச் சூழலில், அயர்லாந்தை தளமாகக் கொண்ட காஸ்மோ பார்மசூடிகல்ஸ் என்ற மருந்து நிறுவனம், முடி உதிர்வை கட்டுப்படுத்தும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டது.
இந்த ஆய்விற்காக, முழுமையாக அல்லது பகுதியளவில் தலைமுடி இழந்த 1,500 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு Placebo மற்றும் Clascoterone எனப்படும் இரண்டு வகை மருந்துகள் வழங்கப்பட்டு, பல மாதங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் Clascoterone மருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டியது. ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்த நிலையில், தற்போது நடைபெற்ற மூன்றாம் கட்ட சோதனையும் எதிர்பார்த்ததைவிட சிறந்த முடிவுகளை வழங்கியுள்ளது.
இந்த வெற்றியின் பின்னணியில், காஸ்மோ பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளாகவே தலைமுடி உதிர்வுக்கான சிகிச்சை உலகளவில் மிகப் பெரிய வணிக சந்தையாக இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் இதன் சந்தை மதிப்பு சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாயாக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், காஸ்மோ நிறுவனத்தின் மருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தால், உலக மருந்து வர்த்தகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இதை முன்கூட்டியே உணர்ந்த முதலீட்டாளர்கள், அந்த நிறுவனத்தில் பெரும் அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அதன் விளைவாக, நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வருங்காலத்தில் இந்த வளர்ச்சி இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த காஸ்மோ பார்மசூடிகல்ஸ் நிறுவனம், அடுத்த கட்டமாக 12 மாதங்கள் நீடிக்கும் பாதுகாப்பு ஆய்வை உறுதி செய்வதே தங்களின் முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளது. அந்தச் சோதனையும் வெற்றிகரமாக முடிந்தால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, மருந்தின் உற்பத்தி மற்றும் உலகளாவிய விநியோகத்தை விரைவுபடுத்த, பெரிய மருந்து நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்தவும் காஸ்மோ நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Clascoterone மருந்து முழுமையான வெற்றியை அடைய வேண்டும் என்பதில், அதன் தயாரிப்பு நிறுவனத்தை விட உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஆண்களே அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தலைமுடி உதிர்வுக்கு நிரந்தரத் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டால், அது மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.