அரசு சித்த மருத்துவமனை இடமாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் அரசு சித்த மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றும் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த முடிவின் மூலம் திமுக அரசு நோயாளிகளை தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளாக்குவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு மருத்துவ வளாகத்தில், இதுவரை புறநோயாளிகள் பிரிவு, சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அந்த இடத்தில் மாநகராட்சி அலுவலகம் அமைக்கப்பட உள்ளதால், புறநோயாளிகள் பிரிவு ஏற்கனவே திருப்பூர்–தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது, அங்கு செயல்பட்டு வரும் அரசு சித்த மருத்துவமனையையும் வேலம்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முடிவை கடுமையாக எதிர்க்கும் பொதுமக்கள், மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டால் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நீண்டநாள் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர். பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள இடம் போக்குவரத்து வசதியுடன் இருப்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகள் எளிதாக வந்து செல்ல முடிகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மக்களின் நலனுக்காக செயல்படுவதாக கூறும் திமுக தலைமையிலான மாநகராட்சி நிர்வாகம், உண்மையில் பொதுமக்களையும் முதிய நோயாளிகளையும் ஏமாற்றுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், மருத்துவமனை வருகை பதிவேட்டிலேயே இடமாற்றத்தை கைவிட வேண்டும் என உருக்கமான கோரிக்கைகளை பதிவு செய்துள்ளனர்.
வளர்ச்சி என்ற பெயரில் மருத்துவ சேவைகளை இடமாற்றம் செய்யாமல், தற்போதைய இடத்திலேயே அரசு சித்த மருத்துவமனை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.