மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் மனு – பரபரப்பு
மதுரை மாநகரில், தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு தகவல்களை பரப்பியதாக கூறப்படும் பெண் ஒருவர்மீது நடவடிக்கை கோரி, அந்தக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
காலாங்கரை பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற பெண், தவெக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயன்பன் கல்லாணை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜயன்பன் கல்லாணை மீது திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாகவும், இதற்கு காரணமான நபர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, 300-க்கும் அதிகமான தவெக மகளிர் அணியினர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்க முயன்றனர்.
அப்போது, 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தவெக பெண் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர், சில பெண் நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக பெண் நிர்வாகிகள், விஜயன்பன் கல்லாணை மீது குற்றம் சாட்டிய சத்யா மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாகவும், கட்சியில் பதவி வழங்கப்படாததன் காரணமாகவே அவர் பழிவாங்கும் நோக்கில் அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.