திமுக ஆட்சிக் காலத்தில் 7,500 கொலைகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியின் போது தமிழகத்தில் சுமார் 7,500 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், கடந்த நான்கு மாதங்களாக காவல்துறை தலைமை இயக்குநரை நியமிக்க முடியாமல் தமிழக அரசு சிரமம் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தலா ரூ.40 கோடி வரை பணம் குவித்து வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக, மத்திய அரசுடன் முரண்பட்டதுதான் தற்போது எஞ்சியிருப்பதாகவும் அவர் கூறினார்.
வரவிருக்கும் தேர்தலில் 200 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையையும் நயினார் நாகேந்திரன் வெளிப்படுத்தினார்.