கிறிஸ்துமஸ் கேக் விவகாரத்தில் திமுக–தவெக இடையே போட்டி – அண்ணாமலை குற்றச்சாட்டு
கிறிஸ்துமஸ் கேக்கை யார் பெற்றுக்கொள்வது என்ற விஷயத்தில் திமுகவும் தவெகவும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு வருவதாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கன்னியாகுமரி அரண்மனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தவெக பங்கேற்றதன் காரணமாக, அந்த நிகழ்ச்சியை திமுக புறக்கணித்ததாக தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர், தீபாவளி பண்டிகைக்கு ஏன் வாழ்த்து கூறவில்லை என்ற கேள்வியையும் அண்ணாமலை எழுப்பினார். இதன்மூலம், தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மத அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்து வருகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது சிலர் இடையூறு ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட அண்ணாமலை, அது வருத்தமளிக்கும் சம்பவம் என்றும், யார் இதற்குக் காரணமாக இருந்தாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக கிறிஸ்தவ மத விழாவில் பங்கேற்றுள்ளார் என்பதையும் அவர் நினைவூட்டினார்.
தொடர்ந்து, விபத்துகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசு பேருந்துகளுக்கு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமான தர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியான நிலையில் இருப்பதாக கூறிய அண்ணாமலை, வரவிருக்கும் தேர்தலில் திமுக தோல்வி அடைவது நிச்சயம் என்றும் தெரிவித்தார்.