ஆழிப்பேரலை பேரழிவு: 21வது நினைவு நாள் இன்று – ஏராளமான உயிர்களை காவு கொண்ட சுனாமி
உலகை உலுக்கிய சுனாமி பேரழிவின் 21வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி, இந்தோனேசியா அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட நில அதிர்வால் பாறைத் தட்டுகள் நகர்ந்ததன் விளைவாக, சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை உருவானது.
இந்த பேரலை வலிமை பெற்றுத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் முழுவதும் பரவி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கடலோர பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவில் குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இந்த பேரழிவில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் உயிர்களை இழந்தனர்.
இந்த துயர நிகழ்வை நினைவுகூரும் வகையில், சுனாமி ஆழிப்பேரலை நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் நினைவு அஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.