வாஜ்பாய் 100-வது பிறந்தநாள் விழா – 280 பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கல்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் பாஜக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது.
வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்புகளை வழங்க பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தகுதி பெற்ற 280 பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவதற்கான உத்தரவின் நகல்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு அதிகாரிகள், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பயனாளிகள் பலரும், இந்த திட்டம் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக தெரிவித்தனர்.
மகளிர் நலன் மற்றும் குடும்ப சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட உஜ்வாலா திட்டம், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு பெரும் பயனளித்து வருவதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டனர். வாஜ்பாயின் பிறந்தநாளை சமூக நலத் திட்டங்களுடன் இணைத்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சி, அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றது.