சொத்து வரி செலுத்தாததால் நடவடிக்கை – ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தகுதியிழப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியின் தலைவர் மற்றும் திமுகவின் 7-வது வார்டு கவுன்சிலராக இருந்த சுதா மோகன்லால், சொத்து வரியை உரிய காலக்கெடுவில் செலுத்தாததால், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆலங்குளம் பேரூராட்சிக்குள் அவருக்குச் சொந்தமான 8 சொத்துகளுக்கான 2022–23 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை அவர் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. செயல் அலுவலர் அறிவிப்பாணை வழங்கியும், அவர் முழுமையான வரி தொகையை செலுத்தவில்லை. முதல் அரையாண்டுக்கான ஒரு சொத்துக்கே வரி செலுத்தப்பட்ட நிலையில், ஏழு சொத்துகளுக்கான வரி செலுத்தப்படாமல் இருந்தது. இரண்டாம் அரையாண்டுக்கான அனைத்து சொத்துகளுக்குமான வரியும் காலதாமதமானது.
இந்த விவரத்தை 9-வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றபின், சுதா மோகன்லாலை சொத்து வரி செலுத்தாததற்காக பதவியில் இருந்து நீக்க கோரி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்துக்கு புகார் அளித்தார்.
முறைமன்ற நடுவர் விசாரணை மேற்கொண்டதில், சுதா மோகன்லால் தன் சொந்த வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரியை தாமதமாக செலுத்தியிருப்பது உறுதியாகியதால், அதற்கான நடவடிக்கை எடுக்க பேரூராட்சிகள் இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, சுபாஷ் சந்திரபோஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுதா மோகன்லாலை மூன்று மாதங்களுக்குள் பதவியில் இருந்து நீக்கி, அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, பேரூராட்சிகள் இயக்குநரின் உத்தரவின் பேரில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பி, “சொத்து வரியை காலத்தில் செலுத்தாததற்காக ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது?” என விளக்கம் கேட்டார். ஆனால் அவர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளப்படாததால், நீதிமன்ற உத்தரவின்படியும் சட்ட விதிகளின்படியும், சுதா மோகன்லால் தனது தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளை இழந்தார் என பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வெங்கட கோபு அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு நேற்று சுதா மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன்னர், அவர்மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை முன்வைத்திருந்தனர். அந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு அக்டோபர் 9 அன்று நடைபெறவிருந்த நிலையில், அதற்கு முன்பே அவர் பதவி உயர்வின் காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால், வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில், சொத்து வரி செலுத்தாத விவகாரத்தில் சுதா மோகன்லால் தற்போது அதிகாரப்பூர்வமாக தனது பதவிகளை இழந்துள்ளார்.