வறண்ட நாடுகளுக்கு முன்னுதாரணம்: தண்ணீர் பற்றாக்குறையை வெற்றிகரமாக நிர்வகிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
தலைவிரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறையை மிகவும் திட்டமிட்ட முறையில் கையாண்டு வரும் நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. வறண்ட பாலைவனமாக அறியப்படும் அந்த நாடு, தனது நீர்த் தேவையை எவ்வாறு திறம்பட சமாளிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
உலகின் ஆடம்பர நாடுகளில் ஒன்றாகப் பெயர் பெற்றது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். வானத்தைத் தொடும் கட்டடங்கள், சூப்பர் கார்கள், ஆடம்பரமான வாழ்க்கை முறை என செழுமையின் அடையாளமாக திகழும் இந்த நாடு, பொருளாதார ரீதியாகவும் வலிமையானது. ஆனால், இதன் பின்னணியில் அந்த நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் – நன்னீர் பற்றாக்குறை.
அரேபிய தீபகற்பத்தின் வறண்ட பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸில், எண்ணெய் வளம் இருந்தாலும், இயற்கை நீராதாரம் மிகவும் குறைவு. நிரந்தர ஆறுகளோ, ஏரிகளோ இல்லாத இந்த நாட்டிற்கு, குறைந்தபட்ச மழைப்பொழிவே ஒரே நம்பிக்கை. குறிப்பாக ஹஜர் மலைகளில் இருந்து கிடைக்கும் மழைநீரை மட்டுமே பெரிதும் சார்ந்துள்ளது.
ஒருகாலத்தில் இயற்கை நீராதாரங்கள் போதுமானதாக இருந்த நிலையில், வேகமான நகரமயமாக்கல், மக்கள்தொகை பெருக்கம், காலநிலை மாற்றம், நிலத்தடி நீர்மட்ட சரிவு போன்ற காரணிகள் இணைந்து, நீர் பற்றாக்குறையை தீவிரமாக்கின.
உப்புநீரை நன்னீராக்கும் தொழில்நுட்பம் – முதுகெலும்பு
இந்தச் சவாலுக்கு தீர்வாக, கடல்நீரை நன்னீராக்கும் (Desalination) தொழில்நுட்பத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முக்கிய ஆயுதமாகக் கொண்டுள்ளது.
நாட்டில் தற்போது 70-க்கும் மேற்பட்ட உப்புநீக்கம் ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம், மொத்த நீர்த் தேவையில் 42 சதவிகிதம் பூர்த்தி செய்யப்படுகிறது.
உலக அளவில் உப்புநீக்கப்பட்ட நீர் உற்பத்தியில் 14 சதவிகித பங்களிப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2008 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் மட்டும், நீர் தேவை 35.8 சதவிகிதம் அதிகரித்தது. இதுவே நிலையான மற்றும் திறமையான உப்புநீக்கத் தொழில்நுட்பங்களில் முதலீட்டை அதிகரிக்க காரணமானது.
இன்று, நீண்டகால தேவைகளை பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் உப்புநீக்க முறைகள் மீது தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
கழிவுநீர் – மறுபயன்பாட்டின் வெற்றி
நிலத்தடி நீர் இன்னும் பயன்படுத்தப்பட்டாலும், அது நிரந்தர தீர்வாக அமையாது என்பதையும் அந்த நாடு உணர்ந்துள்ளது. அதனால், கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், விவசாய நிலங்களுக்கும், தொழில்துறை பயன்பாடுகளுக்கும் திருப்பி விடப்படுகிறது. இதன் மூலம், மதிப்புமிக்க குடிநீர் பாதுகாக்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் 95 சதவிகிதத்தை மீண்டும் பயன்படுத்துவது என்ற தேசிய இலக்கையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்ணயித்துள்ளது.
அவசரகால நீர் சேமிப்பு – பாதுகாப்பு கவசம்
எந்தவித நெருக்கடியான சூழலிலும் நீர் கிடைப்பதை உறுதி செய்ய, பெரிய அளவிலான நீர்த்தேக்கங்கள் மற்றும் அவசரகால சேமிப்பு தொட்டிகளில் பெரும் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இது, நீர் பாதுகாப்பில் அந்த நாட்டின் முன்னெச்சரிக்கை அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
நீர் பாதுகாப்பு உத்தி 2036
நீண்டகால நிலைத்தன்மையை நோக்கமாகக் கொண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ‘நீர் பாதுகாப்பு உத்தி 2036’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த உத்தியில்,
- மொத்த நீர்த் தேவையை 21% குறைப்பது
- நீர் உற்பத்தித்திறன் மதிப்பை ஒரு கன மீட்டருக்கு 110 அமெரிக்க டாலராக உயர்த்துவது
- நீர் பற்றாக்குறை குறியீட்டை 3 டிகிரி குறைப்பது
- சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை 95% மறுபயன்பாடு
- தேசிய நீர் சேமிப்பு திறனை விரிவுபடுத்துவது
- பாதுகாப்பான குடிநீரை மலிவு விலையில் வழங்குவது
போன்ற இலக்குகள் முன்னிறுத்தப்பட்டுள்ளன.
பாலைவனத்தில் பிறந்த ஒரு உலகப் பாடம்
இயற்கை வளங்கள் குறைந்திருந்தபோதிலும், தண்ணீரை நிர்வகிப்பதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அடைந்துள்ள வெற்றி, அதன் தொலைநோக்கு நிர்வாகம், தொழில்நுட்ப அறிவு மற்றும் திட்டமிடல் திறனை வெளிப்படுத்துகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறித்து இன்று நடைபெறும் விவாதங்கள், பாலைவனத்தில் செழித்து வளர்வது பற்றியது மட்டுமல்ல;
புதுமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் திட்டமிடல் மூலம் பற்றாக்குறையை எவ்வாறு பலமாக மாற்ற முடியும் என்பதற்கான ஒரு உலகளாவிய எடுத்துக்காட்டாகவும் அது திகழ்கிறது.
காலநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி உலகளவில் நீர் வளங்களை அச்சுறுத்தி வரும் சூழலில்,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்ற வறண்ட நாடுகளுக்கு ஒரு முன்னோடி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.