“கேலோ இந்தியா” திட்டம் மூலம் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறன் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்
கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறமைகள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஏற்பாட்டில், கடந்த ஒரு மாத காலமாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த போட்டிகளில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,500 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் எல்.முருகன், விளையாட்டு துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய திட்டமே கேலோ இந்தியா திட்டம் என குறிப்பிட்டார். இதன் மூலம், நகர்ப்புறங்களுக்கே மட்டுப்பட்டிருந்த விளையாட்டு வாய்ப்புகள், இன்று கிராமப்புறங்களுக்கும் விரிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கிராமப்புறங்களில் மறைந்திருந்த விளையாட்டு திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான பயிற்சி, வசதிகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு வளர்த்தெடுப்பதே கேலோ இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்தியா உலக விளையாட்டு அரங்கில் முக்கிய இடத்தைப் பெறும் என்றும், கிராமப்புற இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி விளையாட்டு வீரர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.