அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை – திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து, எதிரே வந்த இரண்டு கார்களின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நிலை குறித்து பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் இதுபோன்ற பெரிய அளவிலான விபத்துகள் நடைபெறுவது இது நான்காவது முறை என்றும், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் பராமரிப்பில் தொடர்ச்சியான அலட்சியம் காட்டப்படுவதே இதற்கான முக்கிய காரணம் என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை இந்த குறைபாடுகள் குறித்து எச்சரித்தும், அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளும் திறன் இல்லாத அறிவாலய அரசின் அலட்சியப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். அரசுப் பேருந்துகளின் மேற்கூரைகள் சேதமடைந்து மழைநீர் உள்ளே ஒழுகுவது, பயன்படுத்த முடியாத படிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுவது, போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் அவதியுறுவது போன்ற பல பிரச்சினைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை பொதுமக்களின் உயிருடன் விளையாடும் செயல் என்றும், இதனால் தமிழக மக்கள் திமுக அரசின் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசை, மக்கள் ஆட்சி அரியணையிலிருந்து இறக்காமல் விடமாட்டார்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்தி, பொறுப்பானவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசுப் பேருந்துகளின் பராமரிப்பை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.