இமயமலையில் 16 ஆயிரம் அடி உயரத்தில் சீன எல்லை வரை சாலை – இந்திய ராணுவத்தின் முக்கியத் திட்டம் தொடக்கம்
இந்தியா–சீனா எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு வசதிகளை வலுப்படுத்தும் நோக்கில், இமயமலைப் பகுதியில் 16,000 அடி உயரத்தில் சாலை அமைக்கும் முக்கிய திட்டத்தை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. இந்த திட்டம், எல்லைப் பகுதிகளில் ராணுவத்தின் விரைவு நகர்வை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள முலிங் லா மலைப்பகுதி, இந்தியாவையும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் தன்னாட்சி பிராந்தியத்தையும் இணைத்த பழங்கால வர்த்தக மற்றும் பயண பாதையாக இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த மலைப்பாதை, நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது.
இமயமலையின் மிக உயரமான பகுதிகளில் ஒன்றான இந்த மலைப்பகுதி, 16,000 அடி உயரத்துக்கு மேல் அமைந்துள்ளது. கடுமையான புவியியல் சூழல் மற்றும் இயற்கை தடைகள் காரணமாக, இதுவரை அப்பகுதிக்கு செல்ல நேரடி சாலை வசதி இல்லை. இதனால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சிக்கல் நிலவி வந்தது.
இந்த நிலையில், நீலபானி முதல் முலிங் லா வரை சுமார் 32 கிலோ மீட்டர் நீளத்தில் சாலை அமைக்கும் பணியை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகள், எல்லைச் சாலைகள் அமைப்பில் நிபுணத்துவம் பெற்ற எல்லை சாலை நிறுவனம் (BRO) மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த திட்டத்திற்காக சுமார் 104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தால், சீன எல்லைப் பகுதிகளில் அசாதாரண அல்லது அவசர நிலை உருவானால், இந்திய ராணுவப் படைகளை சில மணி நேரங்களிலேயே அந்தப் பகுதிக்கு கொண்டு செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த சாலை எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் எல்லைப் பகுதிகளில் நிரந்தர கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு கொள்கையில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.