வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு
டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளின் விவசாயிகளுக்கு, பல வாரங்கள் கடந்தும் இழப்பீடு வழங்கப்படாததை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு தானியக் கிடங்குகள் முறையாக பராமரிக்கப்படாததும், நெல் கொள்முதலில் அரசு நிர்வாகம் காட்டிய அலட்சியமும்தான் பல டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துப் போகக் காரணமாக அமைந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
பல மாதங்களாக இரவு பகலாக உழைத்து விளைந்த பயிர்கள் கண்முன்னே வீணாகிப்போனதை பார்த்து விவசாயிகள் மனமுடைந்து நிற்கும் நிலையில், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல், நெற்பயிர்களை பார்சலாக கொண்டு வந்து முதல்வர் ஆய்வு செய்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து பல வாரங்கள் கடந்தும், விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய இழப்பீட்டுத் தொகையை இன்னும் வழங்காமல் திமுக அரசு காலம் தாழ்த்துவது நியாயமற்ற செயல் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேடைகளில் “நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன்” என முழங்குவதை விட, ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்கி விவசாயிகளின் வேதனையைப் போக்குவதே உண்மையான தீர்வாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.