புதுச்சேரியில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி லெனின் சிலை நிறுவப்பட்டதற்கு, இந்து முன்னணி மற்றும் பாஜக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள அரசு நிலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுமார் 5 அடி உயரமுள்ள லெனின் சிலை நிறுவப்பட்டது. இதற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி, இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, லெனின் சிலை அருகே விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடும் நடத்தப்பட்டது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலைமை மோசமடைவதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். தொடர்ந்து பாதுகாப்பு கருதி, லெனின் சிலையை தார்ப்பாய் கொண்டு மூடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நீடித்தது.