முல்லைப்பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி கருவி மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையில், மத்திய மண்ணியல் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ரிமோட் கட்டுப்பாட்டிலான நீர்மூழ்கி கருவியின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
முல்லைப்பெரியாறு அணையில் முன்பு 152 அடி உயரம் வரை நீர் சேமித்து வைக்கப்பட்டு வந்தது. ஆனால், அணையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதாகக் கூறி கேரள அரசு நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நிலைத்தன்மை குறித்து மத்திய மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன் பேரில் 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அணை பாதுகாப்பாகவும் உறுதியானதாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிக்கை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போதைய நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரையின்படி, மீண்டும் மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, நீருக்குள் மறைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் கட்டுமான அமைப்புகளை ரிமோட் கட்டுப்பாட்டிலான நீர்மூழ்கி சாதனத்தின் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.