எம்ஜிஆர் நினைவு தினம்: இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது சமாதியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அவரது திருவுருவச் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அந்த வரிசையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்போம் என்ற உறுதியையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
அதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், வி.கே. சசிகலா உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.