அனைத்து இந்திய மொழிகளுக்கும் மரியாதை அளிக்கும் மோடி தலைமையிலான அரசு – நயினார் நாகேந்திரன்
பாராளுமன்றத்தின் குளிர்கால அமர்வில், இந்தி மற்றும் ஆங்கிலத்தைத் தவிர்த்து, பிற இந்திய மொழிகளில் மொத்தம் 160 உரைகள் நிகழ்த்தப்பட்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனிய தமிழ் மொழியில் அதிகபட்சமாக 50 உரைகள் இடம்பெற்றது தனிச்சிறப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மட்டுமன்றி, மராத்தி, பெங்காலி, போடோ, மணிப்புரி, சந்தாலி, அசாமி, உருது, கன்னடம் உள்ளிட்ட பல இந்திய மொழிகள் நேரடி மொழிபெயர்ப்பு வசதியுடன் மக்களவை அரங்கில் ஒலித்து, இந்தியாவின் பன்முக கலாச்சார வளமையை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பு என பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் செய்யும் அறிவாலய ஆட்சியின் மொழி அரசியலுக்கு இது மறுமுறை பதிலடியாக அமைந்துள்ளது என்றும் நயினார் விமர்சித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பு வசதி ஏற்படுத்தப்பட்டதற்காக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும், இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக விளங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.