கன்யாகுமரி அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் இடையிலான சந்திப்பு பரபரப்பு
கன்யாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அருமனை பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரை தவெக அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அருமனை சந்திப்பில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண் ராஜ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், விழாவிற்கு வருகை தந்த குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங்கை, அவர்கள் தனியாக சந்தித்து சில நேரம் ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, விழாவில் பங்கேற்க மட்டுமே வந்ததாக கூறி, எந்த விவரத்தையும் தெரிவிக்காமல் பினுலால் சிங் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு மேலும் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கிடையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுடன் பினுலால் சிங் சந்தித்தது, காங்கிரஸ் கட்சிக்குள் புதிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
மேலும், விழாவுக்கான அழைப்பிதழில் எம்பிக்கள் ரூபி மனோகரன் மற்றும் விஜய் வசந்த் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்த போதும், அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.