ஆகாஷ் நவீன வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு – பயனர் சோதனை வெற்றி
ஆகாஷ் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் பயனர் அடிப்படையிலான மதிப்பீட்டு சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
முப்படைகளுக்குத் தேவையான நவீன ஆயுதங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வடிவமைத்து, பல்வேறு கட்ட சோதனைகள் மூலம் பரிசோதித்து வருகிறது. இவ்வாறு தொடர் சோதனைகளில் வெற்றி பெறும் ஆயுதங்கள் படிப்படியாக ராணுவ சேவையில் இணைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஒடிசா மாநிலம் சந்தாபூரில், ஆகாஷ் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் பயனர் மதிப்பீட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு, அது முழுமையாக வெற்றி பெற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில், ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் திறனை ஆகாஷ் நவீன ஏவுகணை வெற்றிகரமாக நிரூபித்ததாகவும், குறைந்த உயரத்திலும் நீண்ட தூர உயரத்திலும் பறக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஏவுகணை முழுமையான உள்நாட்டு ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ராடார் அமைப்புகளை கொண்டுள்ளதாகவும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது. விரைவில் ஆகாஷ் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.