தமிழகத்தை இருள் சூழச் செய்யும் ‘விடியல்’ திமுக ஆட்சி – பாஜக குற்றச்சாட்டு
கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகத்தில் புதிதாக ஒரு மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படவில்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உப்பூர், எண்ணூர், கொல்லிமலை மற்றும் குந்தா நீர்மின் திட்டங்களில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நின்றுவிட்டதாகவும், கட்டுமானம் முடிந்துவிட்ட வட சென்னை மற்றும் உடன்குடி மின் நிலையங்களிலும் இதுவரை மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் மின்சார கொள்முதல் செலவு சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக 2024ஆம் ஆண்டில் மட்டும் ரூ.28,772 கோடி மதிப்பில் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம், கமிஷன் லாபத்திற்காகவே திமுக அரசு மின் உற்பத்தியை முடக்கி வைத்துள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவது குறைக்கப்படும் என்றும், 20,000 மெகாவாட் அளவிற்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், திமுக தனது தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி எண் 231-ல் கூறியதை நயினார் நாகேந்திரன் நினைவுபடுத்தினார்.
ஆனால், அந்த வாக்குறுதிகளை புறக்கணித்து, அரசு நிதியை சிதைத்து, மின் உற்பத்தித் திட்டங்களை கைவிட்டு, தனியாரிடமிருந்து அதிக விலையில் மின்சாரம் வாங்கி கமிஷன் அரசியல் நடத்தும் இந்த இருண்ட ஆட்சியை ‘விடியல் அரசு’ என அழைப்பதே வெட்கக்கேடானது என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.