சிவகங்கையில் மூதாட்டியிடம் தந்திரமாக நகை கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை
சிவகங்கை அரசு மருத்துவமனையில் மூதாட்டியை ஏமாற்றி ஒன்றரை சவரன் அளவிலான தங்க நகைகளைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இருதய நோய்க்கான சிகிச்சைக்காக குப்புசாமி என்பவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மனைவி சந்தானம் அருகில் இருந்து பராமரித்து வந்தார்.
அப்போது குப்புசாமி சிகிச்சை பெறும் வார்டுக்கு வந்த ஒரு நபர், தனது தந்தையும் இதயக் கோளாறால் அதே மருத்துவமனையின் கடைசி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக நம்பவைத்துள்ளார்.
பின்னர், மருத்துவர் சொல்லியதாக கூறி மருந்து வாங்கச் சென்ற சந்தானத்தை அந்த நபர் தொடர்ந்து சென்றுள்ளார். மருத்துவமனையின் கழிப்பறை அருகே, குப்புசாமி வழுக்கி விழுந்துவிட்டதாகவும், அதற்காக அவசரமாக விலை உயர்ந்த மருந்துகள் வாங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறி சந்தானத்தை நம்பவைத்துள்ளார்.
இதனை நம்பிய மூதாட்டியிடம் இருந்து ஒன்றரை சவரன் மதிப்புள்ள தாலி மற்றும் கம்மல்களை அந்த நபர் தந்திரமாகப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது.
பின்னர் மருத்துவமனை வார்டுக்கு திரும்பிய சந்தானம், தன்னை ஏமாற்றி நகைகள் பறிக்கப்பட்டதை அறிந்து சோகத்தில் கதறி அழுதுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.