நெல் மூட்டைகள் தேங்கியதற்கு மத்திய அரசின் தாமதமே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லில் அரிசி அரைக்கும் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசிக்கான அனுமதி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்ததுதான் நெல் மூட்டைகள் தேங்குவதற்கான முக்கிய காரணம் என தமிழக உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் இணைந்து இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:
“இந்த ஆண்டில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நெல் விளைச்சல் அதிகமாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 299 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் செயல்படுகின்றன. இதுவரை 1.06 லட்சம் மெட்ரிக் டன் நெல் வாங்கப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் வாங்கப்பட வேண்டியுள்ளது.
இந்த ஆண்டு சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. தினமும் சுமார் 1,250 லாரிகளின் மூலம் வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோல், ரயில் வாகனங்களிலும் நெல் அனுப்பப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 16 லட்சம் சாக்குகள் இருப்பில் உள்ளன; மேலும் 66 லட்சம் சாக்குகள் வரவேண்டியுள்ளது. சணல் பைகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன.
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லில் அரிசி அரைக்கும் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே நெல் மூட்டைகள் தேங்கியதற்கான காரணம்.
100 கிலோ அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டும் என்பது விதிமுறை. இதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு கடந்த 29-07-2025 அன்று தமிழக அரசுக்கு அனுப்பியது. பின்னர் டெண்டர் நடைமுறைகள் முடிவடைந்து 5 ஒப்பந்தக்காரர்கள் மூலம் 34 ஆயிரம் டன் நெல் வாங்கப்பட்டது. இவற்றில் 100 கிலோ அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்பட வேண்டும். இதற்காக அந்த ஒப்பந்தக்காரர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு அரிசியை அனுப்பியுள்ளனர்.
டெல்லியில் உள்ள தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கணினி மூலம் பரிசோதனை செய்து அறிக்கை வழங்கிய பின்பே கலவை செய்ய அனுமதி வழங்கப்படும். இதுவரை மத்திய அரசிடமிருந்து அந்த அனுமதி வராததால் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. அனுமதி வந்தவுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலவை நடைபெறும். எனவே இதற்குக் காரணம் மத்திய அரசு தாமதம்தான். ஆனால் இதை உணராமல் எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி தவறான கருத்துகள் தெரிவிக்கிறார்,” என்றார் அமைச்சர் சக்கரபாணி.
செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?
நாம் உண்ணும் உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்துவதற்காக அதில் நுண்ணூட்டச் சத்துக்களை திட்டமிட்டு அதிகரிப்பதே “செறிவூட்டல்” என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைய ஆணையம் (FSSAI) விளக்கம் அளிக்கிறது.
செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. இதற்காக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த செயற்கை கலவை (பிரிமிக்ஸ்) பயன்படுத்தப்படுகிறது. அரிசி மாவில் இந்த கலவை சேர்க்கப்பட்டு மீண்டும் அரிசி தானிய வடிவில் தயாரிக்கப்படுகிறது. பின்னர் 100:1 என்ற விகிதத்தில் இது சாதாரண அரிசியுடன் கலக்கப்படுகிறது.