வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் நாடு திரும்புகிறார்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும் அரசியல் வாரிசுமான தாரிக் ரஹ்மான் வங்கதேசத்திற்கு திரும்புகிறார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பவிருக்கும் தாரிக் ரஹ்மானுக்கான வரவேற்புக்கு வங்கதேச தேசியவாதக் கட்சி முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
வங்கதேச அரசியல் பீடத்தில், முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா மற்றும் கலீதா ஜியா இடையே போட்டி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத மாணவர் போராட்டத்தின் விளைவாக, ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு மறுநாளே வங்கதேச தேசியவாதக் கட்சி செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர், தாரிக் ரஹ்மான் லண்டனிலிருந்து நாடு திரும்புவார் என்று அறிவித்தார்.
வருகிற பிப்ரவரி மாத பொது தேர்தல் முன்னிட்டு, தாரிக் ரஹ்மானின் திரும்பும் நடவடிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவாமி லீக் கட்சி தடையுடனும், அதன் மூத்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான BNP கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது. வெற்றிபெறும் பட்சத்தில், தாரிக் ரஹ்மான் அடுத்த பிரதமராக பதவியேற்பார்.
போகுரா-7 தொகுதியில் கலீதா ஜியா, போகுரா-6 தொகுதியில் தாரிக் ரஹ்மான் போட்டியிட உள்ளனர். கடந்த ஜூன் மாதம், அமெரிக்க தூதர் லண்டனில் தாரிக்கை சந்தித்து, இந்தியா-வங்கதேச தொடர்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதே நேரத்தில், முகமது யூனுஸ் லண்டனில் தாரிக்கை சந்தித்து விவாதித்துள்ளார்.
BNP கட்சி பொதுச் செயலாளர் தலைமையிலான குழுவும் லண்டன் சென்று தாரிக்கை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். தாரிக் ரஹ்மான், ஆட்சிக்கு வந்தால் BNP கட்சி செயல்படுத்த உள்ள திட்டங்களை முன்பே அறிவித்துள்ளார். இருப்பினும், மற்ற இஸ்லாமிய மற்றும் இடதுசாரி அமைப்புகளுடன் அவரது தொடர்புகள் குறித்து குற்றச்சாட்டுகள் உள்ளன.
தாரிக் ரஹ்மான், லண்டனில் உள்ள ISI அதிகாரிகளுடனும் பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராஹிம் உடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், கடந்த தேர்தலில் “INDIA OUT” பிரச்சாரத்தை முன்னெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில், தேர்தல் நடைபெறும், தாரிக் வெற்றி பெறுவார், அல்லது தேர்தல் தடுக்கப்படும், இஸ்லாமிய ஷரியா சட்டம் நாட்டில் கொண்டுவரப்படும் எனும் கேள்விகள் இன்னும் பதில் காணவில்லை.