ஆரவல்லி மலைத்தொடர் ஆபத்தில் உள்ளதா? – மத்திய அரசின் விளக்கம்
ஆரவல்லி மலைத்தொடரைப் பற்றி உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய வரையறை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் ஏமாற்றம் மற்றும் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்பின் பின்னணி என்ன? இதுகுறித்து மத்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளது? என்பதை இச்செய்தி தொகுப்பு விளக்குகிறது.
உலகிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர்களில் ஒன்றாக விளங்கும் ஆரவல்லி, இமயமலை உருவாகுவதற்கு முன்பே தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் அமைந்துள்ள இந்த மலைத்தொடர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களை கடந்து சுமார் 800 கிலோமீட்டர் நீளத்தில் பரவியுள்ளது. பனாஸ், லூனி, சபர்மதி போன்ற பல முக்கிய நதிகள் இங்கிருந்து தோன்றுகின்றன. மேலும், தாமிரம், துத்தநாகம், ஈயம், பளிங்கு உள்ளிட்ட கனிம வளங்களும் இம்மலையில் நிறைந்துள்ளன.
தார் பாலைவனம் கிழக்கே விரிவடையாமல் தடுக்கும் இயற்கை தடுப்புச் சுவராக ஆரவல்லி மலை செயல்படுகிறது. அதேபோல், காற்று மாசை குறைப்பதிலும், நிலத்தடி நீர் சேமிப்பிலும் இது முக்கிய பங்காற்றுகிறது. இத்தகைய பல்வேறு சுற்றுச்சூழல் நன்மைகளால், ஆரவல்லி மலைத்தொடர் ‘வடஇந்தியாவின் பசுமை கவசம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த புதிய வரையறை பெரும் விவாதத்திற்குரியதாகியுள்ளது.
கடந்த மாதம் உச்சநீதிமன்றம், 100 மீட்டருக்கு மேல் உயரமுள்ள பகுதிகளே ஆரவல்லி மலைகளாகக் கருதப்படும் எனத் தெரிவித்தது. இந்த அறிவிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஆரவல்லி மலைத்தொடரில் பல பகுதிகள் 100 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை. புதிய வரையறையால், அவை இனி சாதாரண நிலப்பரப்பாகக் கருதப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு குறைந்த உயரமுள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு நீக்கப்பட்டால், அங்கு அதிக அளவில் சுரங்க பணிகள் நடைபெற்று கனிம வளங்கள் அளவுக்கு மீறி சுரண்டப்படும் நிலை உருவாகும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், ரியல் எஸ்டேட் வளர்ச்சி வேகமெடுத்து, இயற்கை சமநிலை சீர்குலையும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், அந்தப் பகுதிகளில் வாழும் அரிய வகை உயிரினங்கள் அழிவுக்கு உள்ளாகும் என்பதுடன், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு மேலும் தீவிரமடையும் அபாயமும் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த Aravalli Bachao அமைப்பின் உறுப்பினரும் திரைப்பட தயாரிப்பாளருமான சந்திரமௌலி பாசு, இது ஒரு பெரும் சுற்றுச்சூழல் பேரழிவாக மாறக்கூடும் என எச்சரித்துள்ளார். மேலும், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்கள் எதிர்காலத்தில் மனித வாழ்வுக்கு ஏற்றதல்லாத பகுதிகளாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, சமூக ஊடகங்களில் #SaveAravalli என்ற ஹேஷ்டேக் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த அச்சங்கள் அடிப்படையற்றவை என மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் விளக்கம் அளித்துள்ளார். ஆரவல்லி மலைத்தொடரின் சுமார் 90 சதவீத பகுதி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளதாகவும், விரிவான மேலாண்மை திட்டம் தயாராகும் வரை புதிய சுரங்க அனுமதிகள் வழங்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டு, ஆரவல்லி மலைத்தொடர் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அரசு அதிகாரிகளும் உறுதியளித்துள்ளனர்