தமிழ் மொழியை முன்வைத்து திமுக அரசியல் நாடகம் நடத்துகிறது
தமிழ் மொழியின் பெயரை பயன்படுத்தி திமுக அரசு வெறும் அரசியல் நாடகம் ஆடுகிறது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்.ஐ. (Sub Inspector) முதன்மைத் தேர்வுக்கான வினாத்தாளில் தமிழ்மொழி தொடர்பான கேள்விகள் முழுவதுமாக நீக்கப்பட்டிருப்பதை கடுமையாக கண்டித்துள்ளார். முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல், தேர்வு நடைபெறும் நாளிலேயே தமிழ் கேள்விகள் அகற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுத் தேர்வுகளில் இவ்வாறு திடீரென விதிமுறைகளை மாற்றுவது, தேர்வு முறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழ்மொழியை புறக்கணித்தது, திமுக அரசின் போலியான தமிழ்ப் பற்றை வெளிப்படுத்துகிறது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களுக்கு தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.