திமுகவுக்கு அதிக நிதி வழங்கிய லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் – தேர்தல் ஆணைய தரவுகள் மூலம் தகவல்
திமுகவுக்கு லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் பெரும் அளவில் நன்கொடை வழங்கியிருப்பது, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விவரங்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனத்தில், லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் நெருங்கிய நண்பரான சுப்பையன் நாகராஜன் பங்குதாரராக உள்ளார். இந்த பின்னணியில், அந்த நிறுவனம் திமுகவுக்கு கணிசமான நிதியுதவி வழங்கியிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் திமுக சமர்ப்பித்த கணக்குப்படி, 2024–2025 நிதியாண்டில் மட்டும் டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனம், திமுகவுக்கு 50 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.
மேலும், 2019 முதல் 2024 வரை லாட்டரி அதிபர் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம், திமுகவுக்கு மொத்தமாக 509 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியிருப்பதும் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இந்த நிதி உதவி முழுக்க முழுக்க நல்லெண்ணத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக கூறினார். அதே நேரத்தில், தமிழகத்தில் லாட்டரி விற்பனையை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.