தொகுதி ஒதுக்கீடு விவகாரம் : அதிமுக–பாஜக பேச்சுவார்த்தை இணக்கமாக நிறைவு
தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே நடைபெற்ற முக்கியமான ஆலோசனை கூட்டம் நல்லுறவுடன் முடிவடைந்ததாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக–பாஜக கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோருடன் நேரடியாக கலந்துரையாடினார்.
பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தேசியச் செயலாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், இரு தரப்பினரும் விரிவான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், பேச்சுவார்த்தை எவ்வித கருத்து முரண்பாடும் இல்லாமல் சுமுகமாக முடிவடைந்ததாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.