ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்ற விவரங்களை LED திரையில் காட்ட கோரிக்கை!
கிரிக்கெட் போட்டிகளைப் போல ஜல்லிக்கட்டு போட்டிகளின் முன்னேற்ற நிலவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் LED திரைகள் மூலம் வெளியிட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் காளைகள் மற்றும் வீரர்களின் முன்னணி நிலவரங்களை நேரடியாக LED திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சி மையத்தின் தலைவர் முடக்காத்தான் மணிகண்டன், போட்டி விவரங்களை வருவாய்த் துறையினர் கணக்கிடும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக குற்றம்சாட்டினார்.